2025 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 04.02.2025 தினம் வரையில் நாட்டில் டெங்கு நோய் தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வருடம் ஆரம்பித்து இதுவரையான காலப்பகுதியில் 5459 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திலே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 740 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பகா மாவட்டத்தில் 849 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜனவரி மாதம் 4943 பேர் டெங்கு தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் நேற்றைய தினம் வரையான காலப்பகுதி வரை 516 பேர் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்திலே குறைந்தளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 15 பெறும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் டெங்கு தொற்று சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன், 16 சுகாதார வைத்திய நிலையங்கள் (MOH) அடங்கிய பிரதேசங்கள் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் டெங்கு தொற்றால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த வருடத்தில் மாத்திரம் 49873 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.