15 மாவட்டங்களில் உள்ள 95 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினூடாக நுளம்புகள் பெருகக்கூடிய 31,145 இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், நுளம்பு முட்டைகள் மற்றும் குடம்பிகளுடன் கூடிய 6,077 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இதன்போது, வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், கட்டுமான தளங்கள், தொழிற்சாலைகள், பொது இடங்கள், மத ஸ்தலங்கள் உட்பட ஒரு இலட்சத்து 28,824 கட்டடங்கள் சோதனையிடப்பட்டுள்ளன.
அவற்றில் 3,916 இடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், 1,470 இடங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களைக் கண்டறிந்து அகற்றுவதன் மூலம் நுளம்புகளால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.