புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற துப்பாக்கிதாரி கல்கிஸ்ஸை வட்டரப்பெல பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
துப்பாக்கிதாரிக்கு உதவி செய்ததாக கூறப்படும் பெண்ணும் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்திற்குள் சென்றுள்ளார்.
பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ‘கணேமுல்ல சஞ்சீவ’ வழக்கு விசாரணைக்காக சுமார் 12 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பின் கீழ் கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்திற்கு இன்றைய தினம் அழைத்துவரப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணிகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்படாததை அறிந்திருந்த சந்தேக நபர்கள் சட்டத்தரணி வேடத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் நீதிமன்றதிற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.