நாளை (25) கொழும்பில் நடைபெறும் இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium)
இலங்கை இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் சங்கமும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலத்திரணியல் ஒலிபரப்பு மாநாடு (Broadcasting Symposium) நாளை (25) கொழும்பில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.ஏ.கே.எல். விஜேநாயக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற, இலத்திரணியல் ஒலிபரப்பாளர்களின் மாநாடு குறித்து ஊடகங்களைத் தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலத்திரணியல் ஒலிபரப்பில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய போக்குகள், புதிய ஊடகங்களின் வருகையுடன் ஊடகத் துறையில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் ஊடகக் கொள்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இலங்கையை ஒலிபரப்புக்கான மையமாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.