உள்ளூராட்சிமன்ற தேர்தல், புத்தளம் பிரதேச சபை, பொத்துவில்லு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இறுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று புத்தளம் எருக்கலம்பிட்டியில் இடம்பெற்றது.
பொத்துவில்லு வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் ஜனாப் லரீப் காசிம் அவர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் உட்சாக வரவேற்புக்கு மத்தியில் வரவேற்கப்பட்டு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
குறித்த பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தலைவர் ஹக்கீம்,
வன்னி மண்ணின் மறைந்த மாமனிதர் மர்ஹூம் நூர்தீன் மஷூர் அவர்களின் காலம்தொட்டு இன்று வரை முஸ்லீம் காங்கிரஸ் மீது அதிக அன்பு கொண்டவர்கள் இந்த மண்ணின் பெண்கள்தான் என்று பெருமிதம் கொண்டார்.

மேலும் இந்த கட்சிக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏனைய பகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி, கெளரவப்படுத்தி, அழைத்து விருந்து வழங்கியதும் புத்தளம் எருக்கலம்பிட்டி கட்சி போராளிகள்தான் என்று நினைவு கூறினார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை கொண்ட கட்சிகள் எல்லாம் இன்று அடையாளம் தெரியாமல் போயிருந்தும், இந்த கட்சி முன்னைய தேர்தலில் பெற்றுக்கொண்ட அதே ஆசன எண்ணிக்கையை போன்று மீண்டும் பெற்று இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்கு கட்சியின் போராளிகள்தான் காரணம் என்று கட்சியின் தொண்டர்களின் அர்ப்பணிப்பை பாராட்டி பேசினார்.




தொடர்ந்தும் உரையாற்றிய ஹக்கீம்,
புத்தளம் எருக்கலம்பிட்டியில் தீராத பிரச்சினையாக உள்ள வடிகான் வேலைத்திட்டத்தை இந்த அரசின் மூலம் பெற்று தருவதற்கு முயற்சி எடுப்பதாகவும், முடியாமல் போனால் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாவது பெற்றுத்தருவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.


மேலும் உள்ளூராட்சி மன்றங்களை ஆளும் கட்சி வென்றெடுக்காமல் போனால், தோல்வியடைந்த குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை கடுமையாக எதிர்த்து பேசிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அவ்வாறு நிதி ஒதுக்காமல் இருக்க இது என்ன ஜனாதிபதியின் தகப்பனின் பணமா என கேள்வி எழுப்பினார்.




ஆளும் கட்சி இவ்வாறான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆளும் தரப்பினர் தற்போது பயத்தினால் இதுபோன்ற விடயங்களை கூறி வாக்கு சேகரிக்கின்ற விடயத்தில் இறங்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
குறித்த கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் பிரதேச சபைக்கான வேட்பாளர்கள், நாகவில்லு கிளை கட்சி போராளிகள், அபிமானிகள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

