கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளிக்கான வேட்பு மனுக்கள் இன்று நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வேலாயுதம் சிவராசா ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில், ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனவே பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு ஏழு அரசியல் கட்சிகளினதும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை கரைச்சி பிரதேச சபைக்கு பத்து அரசியல் கட்சிகளும், மூன்று சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதில் மூன்று அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களும், இரண்டு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
எனவே ஏழு கட்சிகள் மற்றும் ஒரு சுயேட்சைக்குழுவின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட அரசாங்கதிபர் மற்றும் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் ஆகியோரினால் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்