- நீதிமன்ற வாசலிலேயே காட்டுப்பன்றி இறைச்சி வியாபாரம்: பொல்கஹவெலவில் பிடிபட்ட பெரும் வனவிலங்கு வேட்டை மாஃபியா!
- நகைக்கடையில் யானைத் தந்தம், கடைகளில் வனவிலங்கு இறைச்சி: வடமேல் மாகாணத்தில் வனஜீவராசிகள் திணைக்களம் அதிரடி வேட்டை!
- அரிய வகை கடற்சங்கு முதல் மான் கொம்புகள் வரை: அடுத்தடுத்து சிக்கிய 5 பேர் கொண்ட வனவிலங்கு கடத்தல் கும்பல்!
ஜுட் சமந்த
பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு நேர் எதிரே அமைந்துள்ள உணவகத்தில் தொடங்கி, நகைக் கடை என்ற போர்வையில் வனவிலங்கு எச்சங்களை விற்றுவந்த பிரபல நகைக்கடை வரை வடமேல் மாகாண வனஜீவராசிகள் திணைக்களம் முன்னெடுத்த திடீர் சுற்றிவளைப்புகளில் பாரிய சட்டவிரோத வலைப்பின்னலொன்று கூண்டோடு சிக்கியுள்ளது.
வடமேல் வலய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடந்த சில தினங்களாக இரகசியத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட திட்டமிட்ட தேடுதல் வேட்டையின்போது, சட்டவிரோதமாக வனவிலங்குகளின் உடற்பாகங்களை பதுக்கி வைத்திருந்த 5 சந்தேகநபர்கள் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக பொல்கஹவெல நகரில் அமைந்துள்ள தங்க நகை விற்பனை நிலையமொன்றை சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அங்கு மிகவும் அரிய வகையான 2 கருப்புப் பவளப் பாறைத் துண்டுகளும் (Black Coral), யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட தாயத்து ஒன்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டன.
அடுத்தகட்டமாக அலவ்வ – இஹல வலக்கும்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில், வேட்டையாடப்பட்ட 6.750 கிலோகிராம் முள்ளம்பன்றி இறைச்சியும், 17.350 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சியும் மீட்கப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொல்கஹவெல யடிகல்ஒலுவ பிரதேசத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட மற்றுமொரு அதிரடிச் சோதனையில், இலங்கைச் சட்டத்தின் கீழ் அதிபாதுகாக்கப்பட்ட விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு கடமானின் கொம்புகளும், பாதுகாக்கப்பட்ட விலங்கான புள்ளிமான்களின் 8 கொம்புப் பாகங்களும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
சட்டத்தை ஏமாற்றி நீதிமன்றத்தின் கண்களிலேயே விரலை விடும் வகையில், பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இயங்கிவந்த பிரபல உணவகத்தில் வெளிப்படையாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12 கிலோகிராம் காட்டுப்பன்றி இறைச்சியையும் வனஜீவராசி அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இச்சோதனையின் உச்சகட்டமாக, கொடவெல – யகடத்தல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு முற்றுகையில், ஒரு கடமான் கொம்பு, 3 கேளையாட்டு (முள்ளு மான்) கொம்புகள், 3 புள்ளிமான் கொம்புகள், புள்ளிமான் தோல் ஒன்று, ஆழ்கடலில் மட்டுமே உயிர்வாழும் மிக அரிதான லிஸ்டர் சங்கு (Lister’s conch), சிராங்ரா சிலந்தி சங்கு (Chiragra spider conch) மற்றும் விநோதமான இருவாச்சிப் பறவையின் (Hornbill) அலகு உள்ளிட்ட ஏராளமான பெறுமதிமிக்க வனவிலங்கு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்களையும் பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வடமேல் வனஜீவராசிகள் வலய உதவிப் பணிப்பாளர் பிரசாந்த விமலதாச மற்றும் சிரேஷ்ட நிலப் பாதுகாப்பு அதிகாரி மனோஜ் வித்யாரத்ன ஆகியோரின் நேரடி வழிகாட்டலில், வனஜீவராசி அதிகாரி சதுர குணரத்ன தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இத்தீரமிக்க வேட்டையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.




