நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற கோர விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொட்டவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரமுல்ல பகுதியில் நேற்று (23) விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. மாத்தறையிலிருந்து வெலிகம நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, முன்னால் சென்ற கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்றபோது அந்த காருடன் மோதியதுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடனும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் பலத்த காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்து பயணித்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அஹங்கமை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேபோல், யாழ்ப்பாணம், பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், நேற்று (23) மாலை மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஹேன சந்திப் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின. தல்கஹவில பக்கமிருந்து சவ்வுகஸ் சந்தி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கொஹேன வீதிக்குத் திரும்ப முற்பட்டபோது, பின்னால் வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 59 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


