ஜுட் சமந்த
வீதியில் சீறிப்பாய்ந்து கொண்டிருந்த லொறி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைக்குள் புகுந்ததில் மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (08) மாலை 5.00 மணியளவில் மாதம்பே – குளியாப்பிட்டிய பிரதான வீதியில், சுதுவெல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
அமைதியான மாலைப் பொழுதில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த தற்காலிகக் கடையை நோக்கி திடீரெனப் பாய்ந்து வந்த லொறியால் அங்கு நின்றவர்கள் நிலைகுலைந்து போயினர். இதில் கடையில் இருந்த இரண்டு பெண்களும், லொறியைச் செலுத்தி வந்த சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக மாதம்பே பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு லொறி நின்றபாடில்லை; கடையை அடித்து நொறுக்கிக்கொண்டு மேலும் கட்டுப்பாடின்றி ஓடிய அந்த வாகனம், அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வாகன பராமரிப்பு (Service Station) நிலையத்தினுள்ளும் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. அப்போது லொறி மோதிய வேகத்தில் அங்கிருந்த பிரதான கேட் தூண் ஒன்று வேரோடு பெயர்ந்து சென்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விழுந்ததில் அந்தக் காரும் பலத்த சேதத்திற்கு உள்ளானது.
விபத்துக்கான மூலக் காரணத்தை ஆராய்ந்தபோது, வீதியில் வாகனத்தைச் செலுத்தியவாறே லொறியின் சாரதி திடீரெனத் தூங்கிவிட்டமையே இந்த விபரீதத்திற்கு வழிவகுத்துள்ளதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



