(உடப்பு நிருபர்-க.மகாதேவன்)
அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, புத்தளம் புகையிரத வீதியின் பத்துளுஓயா பகுதி பலத்த சேதத்திற்குள்ளானது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையிலான புகையிரத சேவைகளை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரும் நோக்கில் தற்போது புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதத்தில் பெய்த கனமழையினால் பத்துளுஓயா பகுதியில் புகையிரதப் தண்டவாளங்களுக்குக் கீழிருந்த மண் அரிக்கப்பட்டு, பாதை பாரியளவில் சேதமடைந்தது. இதன் விளைவாக புத்தளம் வீதியிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத சேவைகள் சிலாபம் வரை மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால் புத்தளம், முந்தல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்யும் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் நீண்டகாலமாகப் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது மழை தணிந்துள்ள நிலையில், புகையிரத திணைக்களப் பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் சேதமடைந்த தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
“தொடரூந்து சேவை இல்லாததால் நாம் அதிக பணம் செலவழித்து பஸ்ஸில் பயணிக்க வேண்டியுள்ளது. இந்தச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தால் எமது அன்றாடப் போக்குவரத்துச் செலவு குறைவதோடு நேரமும் மிச்சமாகும்,” என அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் சில வாரங்களுக்குள் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, புத்தளம் வரையிலான நேர அட்டவணைப்படி புகையிரதங்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



