ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டு:
பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களின் கருவியாக மாறியுள்ளதா? இலங்கையில் யூதர்களின் சபத் வழிபாட்டு இல்லங்கள், பயங்கரவாத தடைச் சட்டம்(PTA) துஷ்பிரயோகம் செய்யப்படல், பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) இஸ்ரேலியர்களுக்கான கருவியாக மாறியுள்ளமை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசியல் தலையீடுகள் என்பன பற்றி சபையில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டம்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி
திங்கள் கிழமை(17) பாராளுமன்றத்தில் வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறியவையாவன:
வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதி அமைச்சு தொடர்பான இந்தக் குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆரம்பத்தில், திருகோணமலையில் ஒரு விகாரை கட்டப்படுவது தொடர்பாக திடீரென ஏற்பட்ட இனவாத பதற்றம் தொடர்பான இந்த விடயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். இதற்கு முன்பே உறுப்பினர்கள் சிலர் இதுபற்றி பேசியுள்ளனர். இது ஒரு மிக மிக முக்கியமான பிரச்சினை. இது அவ்வப்போது வருகின்றது. எங்கிருந்தோ திடீரென சிலைகள் கொண்டு வரப்பட்டு விகாரைகள் எழுப்பப்படுகின்றன. இது தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகிறது.
வெளிவிவகார அமைச்சு ஒர் இன நல்லுறவு குழுவை அமைத்து, இவ்வாறான மோதல்களை அந்த சபைகளுக்குப் பரிந்துரைக்க முன்வர வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.இங்கிலாந்தில் இதுபோன்ற ஓர் அமைப்பு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. சமய ரீதீயான பதட்டங்களைக் கையாளும்போது அரசாங்கங்கள் தேவையற்ற சர்ச்சையிலும், சிரமத்திலும் சிக்கிக் கொள்வதை நான் அறிந்துள்ளேன்.
இது திருகோணமலையில் நடந்ததை நியாயப்படுத்துவதாக ஆகி விடாது.அது மிகவும் பாரதூரமான விடயம்.திருகோணமலையில் பௌத்தர்கள் இருப்பதால், அங்கு விகாரைகள் அவசியம் என்று கூட நீங்கள் இப்பொழுது சொல்லுவீர்கள். ஆனால், இந்த நாட்டில் யூதர்கள் இல்லை. ஆனால், சபத் இல்லங்கள் என்ற வழிபாட்டுத்தலங்கள் இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாதபோதுயூதர்களுக்காக கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் என்ன நடந்தது?
எனது கட்சி உறுப்பினர்களில் ஒருவர், கொழும்பு மாநகர சபையில், சபத் இல்லம், அதாவது யூதர்களின் வசதிக்காக கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத் தலத்தை விவாதத்தில் சேர்க்காதது ஏன் என்று மேயரிடம் கேட்கும் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த விடயத்தை கௌரவ பிரதமர் சபையில் மிகத் தெளிவாக, இது ஒரு மத ஸ்தாபனத்தை உருவாக்க அங்கீகரிக்கபடாத காரியம் என்று கூறினார். இறுதியாக என்ன நடக்கிறது?
மாநகர சபையில் எனது உறுப்பினர் இந்த பிரச்சினையை எழுப்பி, கொழும்பு மாநகர சபையின் விவாதத்தில் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்கும்போது, அடுத்த நாள், அவர் உடனடியாக பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு (TID) அழைக்கப்பட்டார். அவர் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பினார் என்று கேட்கப்பட்டார். அவர் ஏன் வரவழைக்கப்பட்டார் என்று கேட்டபோது, “இல்லை, கொழும்பு மாநகர சபையில் நீங்கள் கொண்டு வந்த தீர்மானம் பற்றி முகநூலில் சில கருத்துக்கள் வந்துள்ளன” என்று கூறப்பட்டது. அதற்கு அவர், “இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.
கௌரவப் பிரதமர் இது அங்கீகரிக்கப்படாத கட்டிடம் என்று கூறியிருந்தார். அதை அகற்றுவதற்கான பொருத்தமான அதிகாரம் கொண்ட மாநகர சபை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டார். அதற்கு எதுவும் செய்யப்படவில்லை. மாறாக, அவர் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு வரவழைக்கப்பட்டார். அதேபோல், பொத்துவில் பிரதேச சபையில், பொத்துவிலில் உருவாக்கப்பட்ட சபத் இல்லத்தை மூடுவதற்கு அவர்கள் ஒரு முடிவை எடுத்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, முகநூல்பக்கத்தில் சில கருத்துக்களை இட்ட பொதுமக்களில் இளைஞர்கள் இருவர், பொத்துவில் பொலிஸாரால் வாக்குமூலம் அளிப்பதற்காக வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு, அவர்கள் பயங்கரவாத விசாரணைத் பிரிவிற்கு வரவழைக்கப்பட்டனர்.
நீங்கள் ஏன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இத்தகைய அற்பமான விடயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்? ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில்,பயங்கர வாத தடைச் சட்டத்தை (PTA) ஒழிப்பதாக உறுதியளித்த அரசாங்கம்தான் இது. ஆனால், இந்த நாட்டில் ஒரு யூதர் கூட இல்லாத நிலையில், சபத் இல்லங்களை அமைப்பது குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த அப்பாவி மக்களை வரவழைக்க அந்த சட்டம்(PTA) பயன்படுத்தப்படுகின்றது.
அத்தகைய பல மத வழிபாட்டுத் தலங்கள் உருவாகின்றன. இதன் பொருள் என்ன?அதேபோல், கத்தார் மீது இஸ்ரேலால் எந்தவித ஆத்திரமூட்டலும் இன்றித் தாக்குதல் நடத்தப்பட்டபோது வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்ட விதத்தைப் பாருங்கள். அது, “சமீபத்தில் கத்தாரில் பதிவான தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது” என்று மட்டும் கூறுகின்றது.
இந்த அர்த்தமற்ற அறிக்கை எதற்கு? நீங்கள் ஏன் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகின்றீர்கள்? இந்த அறிக்கைகளை வெளியிடுவதற்குப் பதிலாக, அறிக்கையையே வெளியிடாமல் அமைதியாக இருந்திருக்கலாம். இது தேவையற்றது. இது மிகவும் உணர்வற்ற அலட்சியமான, வேண்டுமென்றே பாரபட்சமான, திரிபுபடுத்தப்பட்ட அறிக்கையாகும். இது ஆக்கிரமிப்பாளரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை, அல்லது வெளிப்படையாக மீறப்பட்ட ஒரு நாட்டின் அரசாங்கம் மற்றும் மக்களின் உணர்வுகளை எவ்வாறு பகிர்ந்து கொள்கிறது என்று கூட பேசவில்லை.
கத்தார் ஒரு நட்பு நாடு. இந்த நாடு ஆறு வளைகுடா நாடுகளின் சார்பாக மனித உரிமைகள் சபையில் உறுப்பினராக உள்ளது. மேலும், அவர்கள் மனித உரிமைகள் பேரவையில் எங்களை ஆதரித்தனர்.ஆனால், நீங்கள் ஆக்கிரமிப்பாளரை குறிப்பிடாத ஒரு வெற்று அறிக்கையை வெளியிடுகிறீர்கள், குறைந்தபட்சம் அத்துமீறல்களைக் கண்டிக்கும் அளவிற்குக் கூட செல்லவில்லை.
நீங்கள் இஸ்ரேலைத் தாக்குதல் நடத்திய நாடாக குறிப்பிடப் பயப்படுகிறீர்கள். சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கண்டிக்கும் சில கூட்டங்களை நடத்தியதற்காக ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அதேபோல், நீங்கள் இங்கே செய்கிறீர்கள்.
யாரெல்லாம் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களை கைது செய்கிறீர்கள். சில மாதங்களுக்கு முன்பு பாலஸ்தீனியர்களுடன் தனது ஒற்றுமையைக் காட்டும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டிய ஓர் அப்பாவி இளைஞன் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு (TID ) வரவழைக்கப்பட்டான்.
இப்போது TID இந்த நாட்டில் இஸ்ரேலியர்களின் ஒரு கருவியாக மாறியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளுக்காக சீற்றம் காட்டும் அப்பாவி பொதுமகனை நீங்கள் இப்படித்தான் நடத்துகின்றீர்களா? இந்த பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும்.
அதேபோல், ஜெனீவாவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ( PTA) ஒழிப்பதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் இன்று என்ன நடந்தது? சட்டமா அதிபர் திணைக்களம் ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகத்தை உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நான் ஒரு அறிக்கையைப் பார்க்கிறேன். சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் – இது அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஜெனீவாவில் அளித்த உத்தரவாதம். அரசியல் நோக்கங்களுக்காக சட்டமா அதிபர் திணைக்களம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிவோம்.
சட்டமா அதிபர் திணைக்களம் பல அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் உடந்தையாக இருந்தது. ஜனாதிபதி உட்பட நானும் இன்னும் பலரும் ஒரு சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வரவழைக்கப்பட்டோம். அங்கு சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குப் பதிவு செய்தது. இறுதியில் எங்களின் குடியுரிமை உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கும் .
சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இப்போது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதைப் பாருங்கள். அவர்களின் அதிகாரிகளில் ஒருவராக இருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வேண்டுமென்றே பொய்யாகச் சிக்க வைக்கப்பட்டார்.
எனது கருத்துப்படி, இது ஒரு கற்பனைக் கதை. புத்தளம் அருகில் உள்ள கரைதீவில் ஒரு இடத்திற்குச் சென்று, போதைக்கு அடிமையான பெற்றோரின் ஏழைக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக ‘முத்துக்களைக் காப்போம்’ என்ற ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது என்று அவர்மீது குற்றம் சாட்டினர்.
பயங்கரவாத சித்தாந்தங்களில் ஈடுபட்டதாகக் காட்டுவதற்காக அரசாங்கத்தால் இது ஒரு பொய் சாக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், இறுதியாக புத்தளம் மேல் நீதிமன்றத்தில் பல வருடங்களாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. சட்டமா அதிபர் பல தவணைகளை எடுத்து வருகிறார். வழக்கை மேலும் தொடர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும், இத்தகைய தேவையற்ற விடயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளில் ஈடுபட்டு வருகிறார்.
அரசாங்க பாதுகாப்பு நிதி இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு, பௌத்த மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்புகளில் உள்ள தீவிரவாதத்திற்கு நிதி வழங்க பயன்படுத்தப்பட்டதாக ஜனாதிபதியே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்குகளைத் தாக்கல் செய்வதில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்கள் தேவையற்ற முறையில் இந்த விடயங்களை மேல் நீதிமன்றத்தில் இழுத்தடிக்கிறார்கள்.
எனவே, இந்த விடயங்கள் முடிவுக்கு வர வேண்டும். சில நாட்களுக்கு முன்புதான், புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த விடயத்தை முடிக்குமாறு உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தேவையற்ற முறையில் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டு, அப்பாவி வழக்கறிஞர்கள் மீது கொண்டு வரப்பட்ட தேவையற்ற தண்டனைத் தடைகள் அவர்களின் அரசியல் நோக்கங்களால் தூண்டப்பட்டுள்ளன. இது முடிவுக்கு வர வேண்டும். எனவே, ஒரு சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்பட வேண்டும்.
அதைக் கூறி இத்தோடுமுடிக்கின்றேன் என தனது உரையை நிறைவு செய்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் உரைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பின்வருமாறு பதிலளித்தார் :
கௌரவ உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களே, நீங்கள் சுட்டிக்காட்டிவை அனைத்திற்கும் நன்றி. அவை அனைத்தும் நன்கு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. நான் இரண்டு விடயங்களுக்கு மட்டுமே பதிலளிக்கிறேன். அவற்றில் ஒன்று பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA). புதிய சட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது என்று நான் காலையில் கூறினேன், ஒருவேளை, அப்பொழுது நீங்கள் இங்கு இருக்கவில்லை. தற்போது அது சிங்களம் மற்றும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
எனவே, மிகக் குறுகிய காலத்திற்குள், பயங்கரவாதம் தொடர்பான புதிய சட்டம் பொது ஆலோசனைகளுக்காக வெளியிடப்படும். எனவே, மக்கள் கருத்துக்களை வழங்க போதுமான அவகாசம் இருக்கும். சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் உறுதியளித்ததையும், எங்கள் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததையும் நாங்கள் செய்துவிட்டோம்.
இரண்டாவது, சுயாதீன வழக்குத் தொடுநர் சேவை பற்றி. வேறு எந்த சர்வதேச அழுத்தத்தினாலும் நாங்கள் உறுதியளிக்கவில்லை. நாங்கள் சுயாதீன வழக்குத் தொடுநர் பிரிவை நிறுவப் போகிறோம் என்று சொன்னபோது, அது எங்கள் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது. நாங்கள் அதைக் குறித்தே சொன்னோம். இருப்பினும், தற்போது, கௌரவ நீதியரசர் யசந்த கொதாகொட தலைமையிலான ஒரு குழு இந்த விடயத்தைப் பரிசீலித்து வருகிறது. கௌரவ சட்டமா அதிபரும் அதில் ஒரு பகுதியாக உள்ளார்.மேலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நாங்கள் பொது ஆலோசனைகளுக்கு அழைக்க விரும்புகிறோம்.
சட்ட அதிகாரிகளின் சங்கம் அவர்களின் ஆட்சேபனை குறித்து எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே, வேறு யாரையும் போலவே அவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். ஆனால், இந்த அரசாங்கம் ஒரு கருத்தை எடுத்துக்கொண்டு விடயங்களை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்று அர்த்தமல்ல. நாங்கள் அனைத்து கருத்துக்களையும் பரிசீலிப்போம், ஆனால் எங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு நாங்கள் உறுதியளித்ததை எது வந்தாலும் நாங்கள் தொடருவோம் என பதிலளித்தார்.


