எந்தச் சேவையாக இருந்தாலும் அதை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்யும்போது சவால்கள், அழுத்தங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் செயற்பட்டால் எப்போதும் யாருக்கும் பயப்படவேண்டியதில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மறைந்த ரகுநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன், ரட்ணம் பவுண்டேசனின் ஏற்பாட்டில், விஷன் குளோபல் எம்பவமன்ர் ஊடாக இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களில் நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வவுனியாவிலுள்ள மாகாண தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக்கல்வி மையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31.08.2025) விஷன் குளோபல் எம்பவமன்ர் தலைவர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், மாணவர்களுக்கான புலமைப்பரிசிலுக்குரிய சான்றிதழ்களை வழங்கி வைத்தார். அங்கு அவர் தனது உரையில்,
பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்றவர்களில் பெரும்பான்மையானோர் புத்தகப்பூச்சிகளாகவே இருக்கின்றனர். அவர்கள் சமூகத்துக்கும் உதவுவதில்லை. ஆனால் இன்று உங்களுக்கு கற்கின்ற காலம் முழுவதுக்கும் புலமைப்பரிசில் நிதியை வழங்குகின்றார்கள். அத்துடன் வெறுமனே நிதியை வழங்கிவிட்டுச் செல்லாமல், உங்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியையும் தந்திருக்கின்றார்கள். நிச்சயம் அது உங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும். இப்போது கல்வி கற்றிருந்தால் மாத்திரம் போதாது. ஒவ்வொருவரும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் உங்களுக்கு நிதியுதவியுடன் அந்தத் திறனை வளர்ப்பதற்கு ஏதுவான களத்தையும் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள்.

நாம் மற்றையவர்களுக்கு இரங்குதல் – உதவி செய்தல் ஆகிய பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஏழை எளியவர்கள் எங்களை நாடி வந்தால் அவர்களுடன் நாம் கதைப்பதால் அவர்களுக்கு உதவி செய்வதால் ஒருபோதும் நாம் சிறுமைப்பட்டு போகமாட்டோம். ஆனால் எங்கள் அதிகாரிகளில் சிலர் தாம் கதிரைகளிலிருந்தால், தங்களைப் பெரியவர்கள் என நினைத்துக்கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உதவுவதற்கு விரும்புகின்றார்கள் இல்லை. எதிர்காலத்தில் அத்தகைய பதவிகளுக்கு வர இருக்கும் நீங்களாவது சரியான திசையில் வளரவேண்டும். எங்களுக்கு வழங்கப்பட்ட இந்தப் பதவிகள் சேவை செய்வதற்கானது. அத்தோடு நீங்கள் ஒவ்வொருவரும் நேரிய சிந்தனையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். எதையும் எங்களால் செய்ய முடியும். முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. இதை நீங்கள் ஒவ்வொருவரும் மனதிலிருத்தவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வவுனியாப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ.அற்புதராஜா, உதவிப் பதிவாளர் ஜெயக்குமார், விஷன் குளோபல் எம்பவமன்ர் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ரனி ஜீவரட்ணம் மயூரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.