மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி – தலைவர் ரிஷாட்!
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம நேர்மையான, தைரியமான ஒரு அரசியல்வாதி என்றும் கோட்டா மக்கள் சேவைக்கு பொருத்தமற்றவர் என அவர்தான், ஆரம்பத்திலேயே அடையாளங்கண்டவர் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (10) நாடாளுமன்றத்தில், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான, அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
“மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச். நந்தசேன மற்றும் டியுடர் குணசேகர ஆகியோர் தொடர்பில், இன்று இந்த விவாதம் மும்மொழியப்பட்டிருக்கிறது. இவர்கள் மூவரும் நாட்டுக்கு பல நல்ல பணிகளைச் செய்தவர்கள்.
குறிப்பாக, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம அவர்களுடன் நீண்ட காலம் பழகக்கூடிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. அவர் ஒரு அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக இருந்து, இந்த நாட்டுக்கு நிறைய நல்ல பணிகளை செய்த ஒருவர். அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில், போக்குவரத்து துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை செய்தவர். அவருடைய காலத்திலேதான், இந்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று, வடக்கு, தெற்குக்கான ரயில் பாதை, யாழ்ப்பாணம், கொழும்பு ரயில் பாதை மற்றும் மன்னார் ரயில் பாதை ஆகியவற்றின் புனரமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நல்ல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதேபோன்று, பல இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கினார். அவர் நேர்மையான, பண்பான ஒரு அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். களுத்துறை மாவட்டத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளைப் பெற்று, வெல்லக்கூடிய ஒருவராக இருந்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ஷவை அந்தக் கட்சி முன்னிறுத்தியபோது, அந்தக் கட்சியிலேயே இருந்துகொண்டு, அவர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் செயலாளராக இருந்தவர் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டும், அவரை எதிர்த்துப் பேசியவர். “கோட்டா இந்த நாட்டுக்கு தகுதியானவர் அல்ல, ஒரு பிரதேச சபை உறுப்பினராகக் கூட பணியாற்றாதவரிடத்திலே, ஜனாதிபதி பதவியை எவ்வாறு ஒப்படைக்கப் போகின்றீர்கள்?” என்று, தைரியமாக பேசிய ஒருவர்தான் குமார வெல்கம அவர்கள். அவர் எதையும் நேர்மையாக, வெளிப்படையாக பேசுகின்ற, பக்குவமுள்ள ஒரு அரசியல்வாதி.
அதுபோன்று, “அரகல” சமயத்தில், ஒரு சில அநியாயக்காரர்கள் அவரை அடித்துக் காயப்படுத்தி, கஷ்டமான நிலைக்கு ஆளாக்கினர். எனினும், அவர் யாரையும் கடிந்துகொள்ளாமல், அந்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் அவருடைய பணிகளை முன்னெடுத்து வந்தார்.
குமார வெல்கம அவர்களுடைய இழப்பு, இந்த நாட்டுக்கு குறிப்பாக, களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய இழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது கட்சி சார்பாக, ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோன்று, எச். நந்தசேன அவர்கள், நான் திருமணம் முடித்துள்ள மதவாச்சிய பிரதேசத்தைச் சேர்ந்தவர். என்னுடன் மிகவும் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். வட மத்திய மாகாண சபை உறுப்பினராக, அமைச்சராக, பதில் முதலமைச்சராக இருந்து, அந்த மாகாணத்துக்கு நிறைய சேவைகளைச் செய்தவர்.
பாராளுமன்ற உறுப்பினராக ஒருமுறைதான் அவரால் வெற்றிபெற முடிந்தது. எனினும், அந்தக் காலப்பகுதியில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக, மதவாச்சிய தொகுதிக்கு பல நல்ல பணிகளைச் செய்திருக்கிறார். அவருடைய இழப்பு மாவட்டத்திற்கு பேரிழப்பாகும். இத்தருணத்தில், அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும், அனுராதபுர மாவட்டத்தின் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை, கட்சி சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், டியுடர் குணசேகர அவர்கள் 1977இல், கம்பஹ மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதன் பின்னர், போலாந்து நாட்டின் தூதுவராக இருந்து பணியாற்றியவர். அவர் ஒரு செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில், ஒரு அரசியல்வாதியாக இருந்து அந்த மாவட்டத்துக்கு பல சேவைகளை செய்திருக்கிறார். அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சிக்காக, பல தியாகங்களை செய்த ஒருவர். எனவே, அவரது குடும்பத்தினருக்கும் எனது கட்சி சார்பில், ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி” என்று குறிப்பிட்டார்.