அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை “ஒரே இரவில் அழித்துவிடுவோம்” (Taken out in one night) என்று விடுத்துள்ள எச்சரிக்கை மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) உடனடியாக திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் செவ்வாய்க்கிழமை இரவு (ஏப்ரல் 7, 2026) ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் தரைமட்டமாக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது. ஈரானின் ஒவ்வொரு பாலமும், மின்சார நிலையமும் எரியும், வெடிக்கும்; அவை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்த முடியாதபடி அழிக்கப்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த மிரட்டலை “மனநோயாளித்தனமானது” (Delusional) என்று ஈரான் ராணுவம் சாடியுள்ளது. ஈரானின் சிவில் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக அமெரிக்காவிற்குச் சொந்தமான தளங்கள் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் மீது “உலகம் பார்த்திராத மிகக் கடுமையான பதிலடி” கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் பாலங்கள் மற்றும் மின் நிலையங்களை தாக்குவது “போர்க்குற்றம்” என்று சர்வதேச சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஈரானின் ஐக்கிய நாடுகள் சபை தூதரகம், இது பயங்கரவாதத்தைத் தூண்டும் செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.


