காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு தரப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே காசாவில் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கப் போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்துள்ளார். காசா தாக்குதலை நடத்த உலக நாடுகள் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென ஒரு நாள் இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் படை மோசமான தாக்குதலை நடத்தியது. அங்கிருந்த அப்பாவி மக்களைச் சுட்டுத்தள்ளிய ஹமாஸ் படை, பல இஸ்ரேல் நாட்டினரைப் பணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அதன் பிறகு காசாவில் இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஆரம்பித்தது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அறிவித்தது.
இஸ்ரேல் தாக்குதலில் ஏற்கனவே ஹமாஸ் தலைவர் சின்வார் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், மோதலை முடிவுக்குக் கொண்டு வர மறுக்கும் நெதன்யாகு, காசாவை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரேல் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அறிவிப்பு அதேநேரம் இஸ்ரேல் மோதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்காக இஸ்ரேல் மீது உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தும் வருகிறது. இதற்கிடையே முக்கிய நகர்வாகக் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப்போவதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்தாலும் கூட இதுவரை பல நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரிக்காமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன. குறிப்பாக பிரான்ஸ் கூட சமீபத்தில் தான் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை எடுத்தது. மேற்குலக நாடுகளில் முக்கிய நாடாக இருக்கும் பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க எடுத்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
இதுவரை இப்படி சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தச் சூழலில் தான் அல்பானீஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “செப்டம்பரில் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் 80வது கூட்டத்தொடரில் பாலஸ்தீனத்தை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும் என்பதை இன்று என்னால் உறுதிப்படுத்த முடியும்.

பாலஸ்தீனிய அதிகாரசபையிடமிருந்து ஆஸ்திரேலியா பெற்ற உறுதிமொழிகளின் அடிப்படையில், பாலஸ்தீன மக்களுக்கு ஒரு தனி நாடு இருப்பதற்கான உரிமையை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கும். மத்தியக் கிழக்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் காசாவில் நடக்கும் மோதல், துன்பம் மற்றும் பட்டினியை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த இரு நாடுகள் முடிவே சிறந்த தீர்வு” என்றும் அவர் தெரிவித்தார். மேலும், கடந்த வாரம் தான் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைப்பேசியில் பேசியதாகவும் அல்பானீஸ் தெரிவித்தார். காசாவில் நிலைமை மோசமாகிவிட்டதாகவும் அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன என்றும் பிரதமர் நெதன்யாகுவிடம் நான் நேரடியாகக் கூறியதாக அல்பானீஸ் தெரிவித்தார்.
140+ நாடுகள் ஆதரவு
இதுவரை சுமார் 140+ நாடுகள் பாலஸ்தீனத்தைத் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. குறிப்பாகச் சமீப காலத்தில் அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்லோவேனியா, ஆர்மீனியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் அங்கீகரித்தன. பிரான்ஸ், மால்டா, கனடா மற்றும் பிரிட்டன் நாடுகள் ஆஸ்திரேலியாவைப் போலவே அடுத்த மாதம் நடக்கும் ஐநா கூட்டத்தில் அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. ஜி20 நாடுகளைப் பொறுத்தவரை அர்ஜெண்டினா, சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அதேநேரம் அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட மேஜர் நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
