புதிய புகையிரதப் பொது முகாமையாளராக ஜே.ஐ.டி. ஜயசுந்தர இன்று (26) மருதானை புகையிரதப் பொது முகாமையாளர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாகக் (தொழில்நுட்பம்) இதற்கு முன்னர் கடமையாற்றிய ஜே. ஐ. டி. ஜயசுந்தர , புகையிரதப் பொது முகாமையாளர் பதவியில் பணியாற்றுவதற்காக தற்போது நியமிக்கப்பட்டார்.
இன்று காலை சமய அனுஷ்டானங்களுடன் தனது பதவிக்கான கடமைகளை ஆரம்பித்த புதிய பொது முகாமையாளர், உரையாற்றுகையில்;
புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க புகையிரதத் திணைக்களம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் என்பதுடன், இதனை முன்னிலைக்கு கொண்டு வருவதற்கு செயற்படுவதாகவும், அதற்காக அனைவரின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் (போக்குவரத்து பிரிவு) மேலதிக பொது முகாமையாளர் எல்.எச். திலகரத்ன, துறை சார் அமைச்சின் உயர் அதிகாரிகள், புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.