புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும் நாமமாக ரவூப் ஹக்கீம் மாறியிருக்கிறார்.
இந்த நாமத்திற்குச் சொந்தக்காரரான ரவூப் ஹக்கீமுடைய ஆளுமை விருத்தியில் பங்களிப்புச்செய்த பல காரணங்கள் இருக்கின்றன.
முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாதவொரு சக்தியாகத் திகழும் ரவூப் ஹக்கீம், தன்னகத்தே பல ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இவ்வாறான ஆளுமைப்பண்புகளை வளர்த்துக் கொள்வதில் ரவூப் ஹக்கீமுக்கு உறுதுணையாக அவரின் குடும்ப கல்விப்பாரம்பரியம் இருந்தைக் காண முடியும்.
ரவூப் ஹக்கீம் வசீகரமான தோற்றமுடையவர், புன்னகையோடு பலரோடும் பழகக்கூடியவர், சரளமாக மும்மொழிகளிலும் பேசக்கூடியவர்.
குறிப்பாக, இலங்கை திருநாட்டின் எப்பாகத்திலுள்ள மக்களின் பேச்சு வழக்கில் அந்த பிரதேசத்து மக்களைப் போல் மொழியை கையாளும் தன்மை கொண்டவர்.
குறித்த தன்மை இலங்கையில் மாத்திரமல்லாது, இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர்களின் மொழியை அழகாக கையாண்டு பேசுவது அங்கிருக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதையும், பல பிரபலங்கள் இவர் இலங்கையில் பிறந்தவரா? அல்லது இந்தியாவில் பிறந்தவரா? என வியந்து பேசியதையும் குறிப்பிடலாம்.
இவர் சர்வதேச ரீதியாக நன்கறியப்பட்ட ஒரு தலைவராவார்.
கவி இயற்றும் கவிஞன், கவி பாடும் வல்லவன். இந்த ஆளுமையை யாவரும் வியந்து பாராட்டுவதுமுண்டு. குறுகிய நேரத்திற்குள், வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் பல கவிகளை இயற்றி பாராட்டுக்களைப் பெற்ற சம்பவங்களுமுண்டு. அழகு சுந்தர மொழியான தமிழை அழகாக கையாண்டு அழகு கவி இயற்றி, அந்தந்த பிராந்திய பேச்சு வழக்கு மொழியில் கவி பாடும் அழகு தனிச்சிறப்பாகும்.
அரசியல்வாதியாக அறியப்பட்ட ரவூப் ஹக்கீம் சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதிக வாசிப்புப் பழக்கமுடையவராக ஆரம்பம் காலந்தொட்டு இன்றுவரை காணப்படுகிறார். இதன் காரணமாக தனது பேச்சுக்களில் புதுமையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திப் பேசி பலரையும் சொல்லுக்கு அர்த்தம் தேடி அகராதி படிக்க வைத்தவர். எழுத்துத் துரையில் கவிதைகள் மாத்திரமின்றி, முஸ்லிம் சமூகம் தொடர்பில் நூலொன்றையும் வெளியிட்டிருந்தார்.
சட்டத்தரணியாக நீண்டகாலம் பணி செய்வதற்கான வாய்ப்புகள் அரசியலுக்குள் பிரவேசித்ததால் கிடைக்காது போனாலும், அவர் திறமையான சட்டத்தரணி என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி இலங்கை வங்கிக்கொள்ளை வழக்கில் வாதாடி தனது தரப்பிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தததையும் இங்கு நினைவுபடுத்துகிறேன். மேலும், அரசியலில் செயற்பாடுகள், வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சட்டக்கற்கையின் தனக்கிருந்த ஆர்வத்தினால் சட்டமுதுமானி கற்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, சட்டமுதுமானியாக வெளிவந்திருக்கிறார்.
அரசியல் பிரவேசம் என்பது தனது ஆளுமைகளைக் கண்டு தன்னை அரசியலுக்குள் அழைத்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரஃப்போடு ஆரம்பமாகியது.
1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃபின் வேண்டுகோள்களின்படி சிறப்பாகச் செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் ஹக்கீம் அயராது பாடுபட்டார். 1992ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது அவர் தலைமைக்குப் பக்கபலமாகச் செயற்பட்டார்.
ரவூப் ஹக்கீமின் ஆளுமை பண்புகள், கட்சி செயலாளராக சிறப்பாக செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற் கொள்ளப்பட்டதால் 1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34வது வயதில் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களுக்காக ஜெய்சீஸ் அமைப்பு வருடாவருடம் வழங்கும் சிறந்த இளைய அரசியல்வாதிக்கான விருதை வென்றுள்ள ரவூப் ஹக்கீம் ,கொழும்பு மாவட்ட பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றவராவார் .
1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப், தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப்பதவியில் இருந்து அகற்றி , தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக ஹக்கீமை அஷ்ரஃப் பதவி மாற்றம் செய்தார்.
2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஆனால் மரச் சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.
2000ம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சி தலைமைத்துவத்திற்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.
2000ம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.
2001ம் ஆண்டு மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இணக்ககலவர்த்தின் பின்னணியில் அரச சார்பு அரசியல்வாதிகள் இருந்ததனை ஹக்கீம் வெளிப்படையாகவும் பலமாகவும் கண்டித்ததன் காரணமாக தனது அமைச்சரவையிலிருந்து சந்திரிக்கா அம்மையார் ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவில் இருந்து இரவோடிரவாக அதிரடியாக நீக்கினார். அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் சந்திரிக்கா அரசு பெரும்பான்மையை இழந்து தடுமாறி கவிழ்ந்தது.
2001ம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப்ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.
பாராளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை , முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதாவுல்லாஹ் , ஹரீஸ் , அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, சந்திரிக்கா அணியோடு இணைந்து ஒரு சவால் மிக்க சூழலை கிழக்கு அரசியலில் தோற்றுவித்த போதும், மிகவும் துணிச்சலோடு களத்தில் இறங்கிய ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி, மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததன் காரணமாக பங்காளிகட்சியான முஸ்லிம் காங்கிரஸும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு வழங்கப்பட்டது. அதே வருடம் டிசம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.
2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. கட்சியின் மட்டக்களப்பு முக்கிஸ்தர் திடீர் என கட்சி தாவியதால் உருவான சவால் மிக்க சூழலை தைரியமாக எதிர்கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம், தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றார். கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் பதவியைவிட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலூடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
மகிந்த ராஜபக்ஷ அரசின் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தை மிகவும் இக்கட்டான சூழ் நிலைக்கு ஆளாக்கி இருந்த்ததனால் அரசுக்குள் இருந்து கொண்டே சமூகத்திற்கான போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்கின்ற சாணக்கியமான நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த ஹக்கீம் , 2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அன்றைய எதிரணி பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.
2015ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக அவர் இருந்தார்.அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னைய அமைச்சுக்களுடன் சேர்த்து உயர்கல்வியமைச்சும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவர் 2019ம் ஆண்டு பாராளுமன்ற அரசியல் வாழ்வில்தொடர்ச்சியாக 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளி விழா கண்ட ரவூப் ஹக்கீம், 2024ம் ஆண்டு பாராளுமன்ற வாழ்வில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்து “முத்து விழா” கண்ட அரசியல்வாதியாகினார் .
சமூகம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் போது அமைச்சுப் பதவிகளைத் துறந்து வெளியேறி துணிச்சலுடன் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகண்டவர் ரவூப் ஹக்கீம் . ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அழிக்க அந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திய போது கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் உருவாக்கப் பட்டபோது அவற்றிற்கும் ரவூப் ஹக்கீம் முகம் கொடுக்க நேர்ந்தது .
2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டு முதன்மை வெற்றியாளராக வெற்றி பெற்றார். பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அரசியலை ரவூப்ஹக்கீம் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.
2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாதச்சக்திகளின் நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.
ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், முஸ்லிம் விவாக, விவாகரத்து, காதி நீதி மன்றத்திற்கெதிரான நிலைப்பாடு, மத்ரஸாவுக்கெதிரான கருத்து எனப்பலவாறான பிரச்சனைகளுக்கு சமூகம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, தனது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த ஆட்சி நாட்டு மக்களை வீதிக்கு இறக்கும் நிலையைத் தோற்றிவித்தருப்பதை கண்டித்து தனி நபராக தன்னாலான அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் தலைவராக ரவூப் ஹக்கீம் திகழ்ந்தார்.
முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பெண் அடிமைவாதிகள் என பிழையான கருத்தியலை பிரசார உத்தியாக இனவாதிகள் கையில் எடுத்திருந்த சூழலில் , போது ரவூப் ஹக்கீம் அவ்விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் “WE ARE A PART , NOT APAART ” (நாம் ஒரு பிரிவினரேயன்றி , பிரிந்து வாழ்பவர்கள் அல்லர்) என்ற நூலை எழுதி 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த வருடம் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார்.
இந்நூலில் ” இஸ்லாம் பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவமும் கொண்ட மார்க்கமல்ல” என்ற கருதுகோளை அவர் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூல் காலத்திற்குப் பொருத்தமான நூலாக நோக்கப்படுகிறது.
இவ்வாறு தனது வாழ்நாளில் பல படித்தரங்களைப் பெற்று முன்னேறி இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தோடு செயற்படும் தலைவராக, பெரும்பான்மை இன மக்களின் ஆதரவையும் ஒரு சேரப் பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர் என்ற தகமை ரவூப் ஹக்கேமிற்கே உரியது.அவர் சிங்கள மக்களோடும்,தமிழ் மக்களோடும் சிறந்த உறவைப் பேணி வருகிறார்.ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இனநல்லுறவைப் பலப்படுத்தும் தலைவராக ரவூப் ஹக்கீம் இருப்பதனால், “அமரபுர நிக்காயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தினால்” அதன் துணை பீடாதிபதி கொடுகொட தம்மவாச நாயக்க தேரரின் தலைமையிலான சங்க சபை “சர்வ சமய சாமகாமீ தேச அபிமானி லங்கா புத்ர” எனும் விருதை கண்டி புஷ்பானந்த கேட்போர் கூடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.
2024ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி சார்பான இடதுசாரி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னணியில் 2025ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஏனைய கட்சிகளுக்கு பெரும் சவாலாக காணப்பட்டபோது, பெரும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி கண்டுவிடுவோம் என்று ஒதுங்கிய நிலையில், ரவூப் ஹக்கீம் போன்றவர்களை தோற்கடிக்கவேண்டும் என நாலா பக்கத்தாலும் சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருந்த சூழலில் உறுதியான குரலை பாதுகாக்கவேண்டும் என எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக இறைவன் உதவியால் சதிகளை முறியடித்து ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதன்மையாக மீண்டும் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற பலமும் ஆட்சியாளர் கைவசம் இருக்கத்தக்கதாக பாராளுமன்றத்தில் நாட்டின் நலனுக்காக,சிறுபான்மை மக்களின் உரிமைக்காக,தான் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச் சொல்பவராக,குரல் கொடுப்பவராக ரவூப் ஹக்கீம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளதை காணமுடிகிறது.
பாராளுமன்றத்தில் இன்று அனுபவமில்லாத பலர் இருக்கத்தக்கதாக ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் மூன்று தசாப்த பாராளுமன்ற அனுபவம் என்பது இன்றியமையாத ஒன்றாக மக்களால் உணர முடிந்திருக்கிறது.