நாடுபூராகவும் சிதறிவாழும் சுமார் 1.6 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட வலது குறைந்த சமூகம், நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 7 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய பிரகடனத்தை அங்கீகரித்த நாடு என்ற வகையில் அச்சமூகத்தின் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பினை அரசு கொண்டுள்ளது.
- அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுமார் 140,000 வலது குறைந்த மக்களுக்கு ரூபா 10,000 வீதப்படி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபா 19,000 மில்லியன் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
- வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வலது குறைந்தோர்களுக்கான அணுகுமுறை ஒழுங்கு விதிகளை, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் வகுப்பதை பிரதான பணியாகக் கொண்டு சர்வதேச தரங்களுக்கும் அளவு கோள்களுக்கும் ஏற்ப திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- வலது குறைந்தோர்களுக்காக பிரதேச செயலகங்கள், புகையிரத நிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்குதல் என்பவற்றுக்காக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.
- வலது குறைந்தோரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின் 3 சதவீதம் வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என உத்தயோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாயினும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- வலது குறைந்தோரின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்குப் பெற்றுக் கொள்வதை நோக்காகக் கொண்டு, தனியார் தொழில்தருநர்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்தல் எனும் நோக்குடன் தொழில் ஒன்றில் ஈடுபடக்கூடிய மட்டத்தில் இருக்கின்ற வலது குறைந்தோரை தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா 15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில் 50 சதவீத சம்பள உதவித் தொகை 24 மாதங்கள் வரை அரசாங்கத்தினால் செலுத்துவதற்கு நாங்கள் பிரேரணை முன்மொழிகின்றோம். இதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.
- ஒட்டிசம் உள்ளிட்ட வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக பகல்நேர பேணிப்பாதுகாத்தல் நிலையங்களை அமைக்கும் பணிகள், சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகளை அடுத்த வருடத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின்கீழ் ரூபா 100 மில்லியன் நிதியும், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ரூபா 447 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கும் பகல்நேர பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கும், மேலதிகமாக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.


