Monday, November 25, 2024
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுதிய பா.உறுப்பினர்களுக்கு ஏன் செயலமர்வு? நடந்தது என்ன?

புதிய பா.உறுப்பினர்களுக்கு ஏன் செயலமர்வு? நடந்தது என்ன?

பொதுமக்களின் அபிலாஷைகள் மிகவும் தீவிரமடைந்திருக்கும் நேரத்தில் அந்த அபிலாஷைகளை நிறைவேற்ற பாராளுமன்ற முறைமையைப் பிரயோகப்படுத்துவது மிகவும் முக்கியமானது என சபாநாயகர்  கலாநிதி அசோக ரன்வல புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெரிவித்தார். பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வை இன்று (25) ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே சபாநயாகர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்ளும் கலந்துரையாடல்கள் ஊடாக மக்களுக்கு சேவையை செய்வதற்கு பாராளுமன்ற பாரம்பரியம், அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை போன்றவை குறித்து நல்ல புரிதலும், அறிவும் அவசியம் என்பதால் இவ்வாறான செயலமர்வை ஏற்பாடு செய்வது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்ட சபாநாயகர், இதனை ஏற்பாடு செய்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலகத்தின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இச்செயலமர்வில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிடுகையில், நாட்டு மக்கள் மிகவும் பலமான பாராளுமன்றத்தைத் தெரிவுசெய்திருக்கும் சூழ்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றுவதே அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்றார். பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் அபிப்பிராயத்தை மாற்றும் செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக பரிமாற்றம் பொது மக்கள் மத்தியில் காணப்பட்ட அரசியல் முதிர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தச் செய்தியைப் புரிந்துகொண்ட நபர்கள் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாரிய பொறுப்பு இருப்பதாகக் கூறினார். இதற்கு அமைய அர்ப்பணிப்புடன் பணியாற்ற இந்தச் செயலமர்வு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இம்முறை பாராளுமன்றம் இந்த நாட்டின் வரலாற்றில் தனித்துவமிக்க பாராளுமன்றம் எனவும், பெண்களின் அதிகூடிய பிரதிநிதித்துவமான 22 பெண் உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமாக அமைவது சாதகமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.

திறந்த பாராளுமன்றம் என்ற கருத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை பிரஜைகளுக்கு நெருக்கமாக கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் பாராளுமன்ற முறைமை மற்றும் அதன் மரபுகள் தொடர்பில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 162 பேர் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது பத்தாவது பாராளுமன்றத்தின் தனிச்சிறப்பு என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். பாராளுமன்ற முறைமைகள் தொடர்பில் சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட அதிகாரிகளின் வளப்பங்களிப்பின் ஊடாக நடத்தப்படும் இச்செயலமர்வை அனைத்து உறுப்பினர்களும் சிறப்பாகப் பயன்படுத்துவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு பாராளுமுன்ற முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன விளக்கமளித்தார்.

இந்தச் செயலமர்வில் பிரதிச் சபாநாயகர்  வைத்தியகலாநிதி மொஹொமட் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர்  ஹேமாலி வீரசேகர, எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச, சபை முதல்வர் அமைச்சர்  பிமல் ரத்னாயக, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர்  வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம், பாராளுமன்ற செயலகத்தின் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

“எங்கே அமர வேண்டும் என்று கேட்டேன்.. அப்போது சொன்னார்கள் மறுபுறம் போய் உட்காருங்க. எந்த பிரச்சனையும் இல்லை டொக்டர், நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் அமருங்கள் என்று. பிறகு நாம் முன்னே சென்று அமர்ந்தோம்.
எமக்கு கெம்பஸ் சென்று பழக்கம்.. கையை உயர்த்தி பாராளுமன்றத்துக்கு வரவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் உட்காரலாம் என்று நினைத்தேன்.

அப்போது நாலு பேர் வந்து என்னுடன் பேசினார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தினமும் உட்காரும் நாற்காலி இது என்று என்னிடம் வந்து சொன்னார்கள். பிறகு மற்றைய நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்தேன். நான் 8வது நாற்காலியில் போய் உட்கார எந்த காரணமும் இல்லை என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்

செயலமர்வின் முதலாவது நாளான இன்று 168 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்போது சம்பிரதாயபூர்வமாக மேற்கொள்ளப்படும் செயற்பாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் செயலமர்வு நாளை (26) மற்றும் நாளைமறுதினம் (27) ஆகிய தினங்களிலும் தொடரவுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Most Popular