கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று புத்தளம் விஜயம்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பாக கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேசங்களுக்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் துறை சார்ந்த இடங்களைப் பார்வையிட்டதோடு, பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும் போது பொது மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக புத்தளம் மாநகர சபை ஊடாகவோ அல்லது மீனவ சங்கங்களின் ஊடாகவோ ஒரு விசேட குழுவை அமைத்து, அவர்களுக்கு வேகமான இயந்திரப் படகுகள் (speed Boats) வழங்கி, அதன் ஊடாக உயிராபத்துக்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டது.
அண்மையில் இடம்பெற்ற அனர்த்தத்தின் போதும் கூட சில உயிரிழப்புகள் இடம்பெற்ற போது அவர்களை மீட்க கடற்படையினால் கூட வர முடியாத சூழ் நிலை சுட்டிக்காட்டப்பட்டதுடன், இதற்காக ஒரு குழு தயாராக இருந்தால் உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளையாவது எடுக்க முடியும் என அமைச்சர் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடற் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளையும் காலம் கடத்தாமல் உடனடியாக வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இதன் போது வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல், மாநகர சபை மேயர் ரின்ஷாத், உறுப்பினர்கள், மீனவ சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




