கறுப்பு அக்டோபர் 2025 – புத்தளத்தில் நினைவேந்தல் ஒன்று கூடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
1990 ஆம் ஆண்டில் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருப்பு அக்டோபர் நினைவேந்தல் நிகழ்வு புத்தளத்தில் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்வை 1990 ஆம் ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கம் (Forcibly Evicted Association – 1990) ஏற்பாடு செய்தது. பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று, தங்களது நில உரிமைகள், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிகழ்வில் கலந்துகொண்டோர் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த அநீதிக்கு விரைவான தீர்வை அரசிடம் கோரினர்.
இந்நிகழ்வில் “எங்கள் வீடுகள், எங்கள் நிலங்கள், எங்கள் உரிமைகள்” என்ற வாசகம் ஒலித்ததுடன் நிகழ்வின் முடிவில் அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.



