புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று (16.03.2025) புத்தளம் நுஹ்மான் மண்டபத்தில் இடம்பெற்றது.
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிப்புகள் யாவும் நிறைவுபெற்றுள்ளதாக புத்தளம் நகர சபை முன்னாள் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி இணை அமைப்பாளருமான M.S.M. ரபீக் தெரிவித்துள்ளார்.
புத்தளம் தொகுதியின் உள்ளூராட்சி சபைகளான புத்தளம் மா நகர சபை, கல்பிட்டி பிரதேச சபை மற்றும் வனாதவில்லு பிரதேச சபைகளில் ஐக்கிய மக்கள் சக்தி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து போட்டியிடுவதுடன் புத்தளம் பிரதேச சபையில் மாத்திரம் ஐக்கிய மக்கள் சக்தி தனித்து போட்டியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை புத்தளம் தொகுதியின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளைய தினம் புத்தளம் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள உதவி தேர்தல்கள் ஆணையாளர் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட தலைவரும், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்ட்ர் அப்புகாமி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
