“ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான ஒரு வீடு” எனும் இலக்கை நோக்கி, புத்தளம் பிரதேசத்தில் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இன்று இரண்டு புதிய வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.J.M. பைசல் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கையளித்தார்.
சேனகுடியிருப்பு கிராமத்தில் மலர்ந்த புதிய வாழ்வு
புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சேனகுடியிருப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பம் ஒன்றிற்கு இந்த நிரந்தர வீடு இன்றைய தினம் முதலாவதாக வழங்கி வைக்கப்பட்டது. தற்காலிகக் கொட்டில்களில் வாழ்ந்து வந்த அக்குடும்பத்தின் நீண்ட காலக் கனவு இதன் மூலம் நனவாகியுள்ளது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.J.M. பைசல், புத்தளம் மாநகர சபை முதல்வர் இன்ஜினியர் ரின்சாத் அஹமட், புத்தளம் தெற்கு மாநகர சபை உறுப்பினர் அனுசா, மற்றும் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர் மற்றும் வீடமைப்புத் திட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தம்மன்னாகமவிலும் தொடர்ந்த மகிழ்ச்சி
அதனைத் தொடர்ந்து, தம்மன்னாகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் மற்றுமொரு வறிய குடும்பத்திற்கு நிரந்தர வீடொன்று கையளிக்கப்பட்டது. குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், தமக்குக் கிடைத்த இந்த வாய்ப்பிற்காக அரசாங்கத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் பிரதிநிதிகளுக்கும் தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.






