புத்தளம் கனமூலையைச் சேர்ந்த முஹம்மது அஷாம் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் கனமூலை கிராமத்தின் முஹம்மது அஷாம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஆகிய இரு இடங்களுக்குமான உதவி திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெருக்குவட்டான் அல் மின்ஹாஜ் பாடசாலை ஆசிரியரான இவர், இலங்கை நிர்வாக சேவை (SLAS) இலங்கை திட்டமிடல் சேவை (SLPS) இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) ஆகிய மூன்று பரீட்சைகளிலும் சித்தியடைந்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக இலங்கை திட்டமிடல் சேவை பரீட்சையிலும் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று இலங்கை திட்டமிடல் சேவைக்கு (Sri lanka planning Service) தெரிவு செய்யப்பட்டு தற்போது உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்
கனமூலை மண்ணின் வரலாற்று சாதனையின் மூலம் தடம் பதிக்கும் முதலாவது திட்டமிடல் அதிகாரி இவர் ஆவார்.
தனது ஆரம்பக் கல்வி முதல் க.பொ.த சாதாரண தரம் வரை கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்று, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் உயர் தர கற்கையை தொடர்ந்தார்.
பட்டப்படிப்பை இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் வெற்றிகரமாக நிறைவு செய்ததுடன், தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் ஆகிய இரு இடங்களுக்குமான உதவி திட்டமிடல் பணிப்பாளராக நியமனம் பெற்று கனமூலை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
