நாட்டிற்குப் புதிய கல்வி முறை ஒன்று தேவை என்பதில் தமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனவும், இருப்பினும், தற்போதைய கல்வி முறையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், குறிப்பாக 6-ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி முறையில் ஒரு பிரச்சினை உருவானதை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு அதனை ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தாஹிர் மரிக்கார் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடியிருந்தால் இத்தகைய பிரச்சினைகள் எழுந்திருக்காது என அவர் சுட்டிக்காட்டினார். கல்வி என்பது நாட்டின் அடிப்படைத் தேவையாகும், எனவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துப் பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அனைவரும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள்.
கல்வி அமைச்சர் புத்தளம் வலயத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை ஆராய்ந்தமைக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினை ஒரு பாலின ரீதியான விவகாரம் அல்ல, மாறாக இது கல்வி தொடர்பான ஒரு முக்கிய விடயமாகும். இப்பிரச்சினை குறித்து கௌரவ கர்தினால் அவர்கள் ஹிரு தொலைக்காட்சியில் முன்கூட்டியே எச்சரித்திருந்ததுடன், இது பற்றி ஜனாதிபதிக்கும் அறிவித்திருந்தார்.
குறிப்பாக, புத்தளம் கல்வி வலயத்தில் விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 500 ஆசிரியர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வளவு பெரிய ஆசிரியர் தட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு கல்வியை எவ்வாறு முன்னேற்ற முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், இதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பௌதீக மற்றும் மனித வளங்கள் இன்றி பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த முடியாது என்பதால், புதிய கல்வித் திட்டத்தில் இவை உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே நிர்வாக வசதிக்காக இந்த வலயத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார். குறிப்பாக, கல்பட்டி மற்றும் மதுரங்குளி ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒரு வலயத்தை உருவாக்குமாறு அவர் சபையில் கோரிக்கை விடுத்தார். மேலும், புத்தளம் கல்வி வலயத்தில் நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமாறு கல்வி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
புத்தளத்தில் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி (President’s Science College) உருவாக்கப்பட்டமை குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டார்.
மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.


