ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் பொத்துவில்லு வட்டாரத்தின் புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் விஷேட கூட்டம் கடந்த ஞாயிறு (09.03.2025) இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி வட்டாரக் கிளை தலைவர் திரு ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், வேட்பாளருக்காக சுமார் 8 பேர் வரை விண்ணப்பித்திருந்ததுடன், புத்தளம் பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பாளரை தெரிவுசெய்யும் ஆலோசனை மிகவும் காரசாரமாக இடம்பெற்றது.
வேட்பாளருக்காக விண்ணப்பித்திருந்த 8 பேரில் 5 பேர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம், ஜனாப் தாஜுதீன் மற்றும் ஜனாப் ரஸ்மின் ஆகிய மூவருக்கிடையில் கடும் போட்டி நிலவியதுடன், இறுதி முடிவுகள் எட்டப்படாமல் எஞ்சியிருந்தனர்.
கூட்டத்திற்கு வருகை தந்திருந்த சபையோரின் அனுமதியுடன், எஞ்சியிருந்த மூன்று பேருக்குமான பொதுமக்கள் வாக்கெடுப்பு ஜனநாயக முறைப்படி நடைபெற்றது.
இதில் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் வாக்களித்ததுடன், அதிகப்படியான பொதுமக்களின் வாக்குகளினால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் ஜனாப் லரீப் காசிம் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தளம் பிரதேச சபை தேர்தலில் ஜனாப் லரீப் காசிம் தோல்வியடைந்திருந்ததுடன், அவரோடு போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
