நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 98ஆயிரத்து 146 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தில் 534 கிராம சேவையாளர் பிரிவுகளுக்குற்பட்ட 98ஆயிரத்து 146 குடும்பங்கலைச் சேர்ந்த 3 லட்சத்து 49ஆயிரத்து 429 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அனர்த்தத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 415 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 4ஆயிரத்து 809 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், சுமார் 121 குடும்பங்களைச் சேர்ந்த 388 பேர் 17 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முந்தல் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 17ஆயிரத்து 551 குடும்பங்களை சேர்ந்த 66ஆயிரத்து 365 பேர் குறித்த மாவட்டத்தில் அதிகளவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 17ஆயிரத்து 297 குடும்பங்களை சேர்ந்த 68ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட 14ஆயிரத்து 102 குடும்பங்களை சேர்ந்த 49ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




