Saturday, August 2, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளம் மாவட்டத்திற்கு 250 மில்லியன் ஒதுக்கீடு!

புத்தளம் மாவட்டத்திற்கு 250 மில்லியன் ஒதுக்கீடு!

புத்தளம் மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் போக்குவரத்து, வீதி மறுசீரமைப்பு, ரயில் கடவை மற்றும் ரயில் போக்குவரத்து தொடர்பான குறைபாடுகள் பற்றிய விஷேட கலந்துரையாடல் இன்று புத்தளம் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

குறித்த விஷேட சந்திப்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான பிமல் ரத்நாயக்க கலந்துகொண்டார்.

இதில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள மூன்று பஸ் டிப்போக்கள் தொடர்பாகவும், அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

புத்தளம் பஸ் டிப்போவுக்கு சொந்தமாக 63 பஸ்கள் இருந்தபோதிலும், அவற்றில் 48 பஸ்களே இயங்கும் நிலையில் இருப்பதாக புத்தளம் டிப்போ தலைவர் சுட்டிக்காட்டியதுடன், மேலதிகமாக 5 புதிய பஸ்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை புத்தளம் தொடக்கம் அட்டவில்லு, மயிலங்குளம், மகாகும்புக்கடவல, இஹலபுளியங்குளம மற்றும் இங்கினிமிட்டியாவ பகுதிகளுக்கும் புதிதாக பஸ் சேவை இடம்பெறவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் புத்தளம் டிப்போவில் உள்ள கட்டிடங்கள் சுமார் 100 வருடங்கள் பழமையானவையும் எனவும், அவைகள் மீள் புனர்நிர்மாணம் செய்யப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,

புத்தளம் டிப்போ குறித்த குறைபாடுகள் தொடர்பிலும், அதன் முகாமைத்துவம் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பஸ் கொள்வனவு தொடக்கம், சேதமடைந்த இலங்கை போக்குவரத்து பஸ்களை திருத்துதல் அனைத்துமே மக்களின் வரிப்பணத்தில் இடம்பெறுவதாகவும், மக்களுக்கு நியாமான சேவைகள் இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் சேவையில் உள்ள அனைத்து பஸ்களுக்கும் GPS இணைப்பை உடனடியாக பொருத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான நெடுஞ்சாலையில் காணப்படும் குறைபாடுகளை இனம்காண நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாதுகாப்பற்ற பாதைகள் மற்றும் ரயில் கடவைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

பாதை திருத்தப்பணி மற்றும் பாலங்கள் புனரமைப்பிற்காக சுமார் 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர், திணைக்கள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular