இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், கடல் கொந்தளிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கரையோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கேசந்துறை முதல் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதேவேளை நாட்டைச் சூழவுள்ள அனைத்துக் கடற்பரப்புகளிலும் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசும்.
பொதுவாக காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும். இருப்பினும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிப்பு மற்றும் மழை காரணமாக புத்தளம் முதல் பொத்துவில் வரையான (காலி, கொழும்பு ஊடாக) கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அல்லது மிதமான அலையுடன் அமைதியாகக் காணப்படும் அதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், அந்தப் பகுதிகளில் காற்று பலமாக வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள், குறிப்பாக மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


