புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு காணப்பட்ட சகல தடைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது பைசல் தெரிவித்துள்ளார்.
ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக வலையமைப்பிற்கு இது தொடர்பில் தொலைபேசி மூலம் வழங்கிய தகவலின்போதே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
புத்தளம் தள வைத்தியசாலை நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமலும், தரமுயர்த்தப்படாமலும், காணப்படுவதால் வைத்திய தேவை கருதி நாடும் பொதுமக்கள் பெரும் அசெளகரியத்திற்கு முகம் கொடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தெரிதலின்போதும், பொதுத்தேர்தல் நடவடிக்கையின்போதும் மற்றும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின்போதும் புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவது தொடர்பில் உரிய தரப்பினருடன் தொடர்ச்சியாக பேசி இருந்ததாகவும், அதன் நிமித்தமாக தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி தருவதாக வாக்குறுதி வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
அதன்படி பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இது குறித்து ஜனாதிபதியுடன் சுமார் 15 நிமிடங்களுக்கும் அதிக நேரம் பேசியதாகவும், அதனைத் தொடர்ந்து புத்தளம் தள வைத்தியசாலை விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சரிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதி அவர்களுடன் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், பிரதி நிதி அமைச்சர் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் உடனிருந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருக்கும் தருணத்தில், ஜனாதிபதியிடம் புத்தளம் வைத்தியசாலை விடயத்தை பேசக்கிடைத்தமையால் உரிய தீர்வு உடனே கிடைத்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
எனவே புத்தளம் தள வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை வைத்தியசாலை விடயம் குறித்து சமூக தளங்களில் சில முரண்பட்ட பதிவுகளை தமக்கு காணக்கிடைத்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



