தான் கற்ற பாடசாலை இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அதற்குத் தோள் கொடுப்பது ஒரு நன்றியுள்ள மாணவனின் தலையாய கடமையாகும். அந்த வகையில், புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 1998ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பிரிவு பழைய மாணவர்கள், இன்று ஒரு உன்னதமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் பாடசாலையின் சுற்றுமதிலின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது. பாடசாலையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்த மதிலை மீண்டும் கட்டியெழுப்ப பெரும் தொகை நிதி தேவைப்பட்டது. இதனை அறிந்த ஊரின் நலன்விரும்பிகள் மற்றும் பரோபகாரிகள் நிதிப் பங்களிப்பு செய்து வரும் நிலையில், 1998ஆம் ஆண்டு அதே பாடசாலையில் கல்வி கற்ற முன்னாள் மாணவர்கள் தாமாக முன்வந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த 1998 நண்பர்கள் குழுவினர், திரட்டப்பட்ட சுமார் 80 ஆயிரம் ரூபாய் நிதியினை பாடசாலை அதிபர் ஜனாப் S.M.ஹுசைமத் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இந்த உதவியினைப் பெற்றுக்கொண்ட அதிபர் ஜனாப் S.M.ஹுசைமத் அவர்கள், பழைய மாணவர்களின் இந்தச் செயலை வெகுவாகப் பாராட்டினார்.
“கல்வி கற்று வெளியேறி பல ஆண்டுகள் கடந்த பின்னரும், தான் கற்ற இடத்தின் தேவையறிந்து ஓடிவந்து உதவும் இந்த மனப்பாங்கு ஏனைய மாணவர்களுக்கும், இளைய தலைமுறைக்கும் ஒரு சிறந்த பாடமாகும்” என கல்லூரியின் அதிபர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார ரீதியாக அனைவரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இக்காலகட்டத்தில், நட்பின் பெயரால் ஒன்றுணைந்து தமது பாடசாலைக்காக இந்த நிதியுதவியை வழங்கியமை இப்பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் இந்தச் செயல், “எம்மை உருவாக்கிய பாடசாலைக்கு நாம் செய்யும் கைம்மாறு” என சமூக ஆர்வலர்களால் பாராட்டப்படுகிறது.




