2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை ரீதியில் சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 198 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 194 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல், அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51,969 ஆகும், இது 17.11% சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 1.06% அதிகம் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.
மாகாண மட்டத்தில், 70 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் சப்ரகமுவ மாகாணம் முதலிடத்தையும், தென் மாகாணம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.
வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், சப்ரகமுவ மாகாணம் மிக உயர்ந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஊவா மாகாணம் இரண்டாவது இடத்தையும், தென் மாகாணம் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில், 70 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் குருநாகல் மாவட்டம் முதலிடத்தையும், ஹம்பாந்தோட்டை, கேகாலை மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்துள்ளன.