பு/எருக்கலம்பிட்டி கிராமத்தில் இன்று, ஞாயிற்றுக்கிழமை, 19.09.2021, பு/எருக்கலம்பிட்டியில் வசிக்கும் சுமார் 700 குடும்பங்களுக்கு உலர் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த, வவுனியா ‘நியூ லக்கி டெக்ஸ்’ வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளலர் அல்ஹாஜ் ஜுனைத் பாஹிம் ( பபா ஹாஜியார்) அவர்களினால் புஎருக்கலம்பிட்டியில் வசிக்கும் எமது மக்களுக்காக குறித்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசியும், 5 கிலோ கோதுமை மாவும் பு/எருக்கலம்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபை ஊடாக இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த உணவுப் பொருட்களைப் பெறத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களது வீடுகளுக்குச் சென்று அடையாள இலக்கங்களை ( Token Number) விநியோகித்து, ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் சுகாதார வழிமுறைகளைப் பேணி மேற்படி உலர் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
பொருட்களின் விநியோகத்தை சீராகவும், ஒழுங்கு முறையிலும் பகிர்ந்தளிக்க உள்ளூர் நம்பிக்கையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, கடந்த சில தினங்களாக, இராப்பகலாக பாடுபட்டு அர்ப்பனிப்புடன் செயற்பட்டமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இப் பாரிய அன்பளிப்பை வழங்கிய, அன்புக்குரிய ஜனாப். ஜுனைத் பாஹிம் ஹாஜியார் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், இதனை ஏற்பாடு செய்த நம்பிக்கையாளர் சபைக்கும், நமது ஊர் மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் அதேவேளை, அந்த பெருந்தகைக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சந்தோஷத்தையும், சௌபாக்கியத்தையும், சுபீட்சத்தையும் வழங்க வேண்டுமென இருகரமேந்திப் பிரார்த்திக்கிறோம்.
கடந்த ஜூலை மாத முதல் வாரத்தில், பு/எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, நமது ஊர் வர்த்தகப் பிரமுகர்களும், தொழில்சார் நிபுணர்களும் மனமுவந்து வழங்கிய நன்கொடைப் பணமான, ஏறத்தாழ, 49 லட்சம் ரூபா பணத்தை, தலா 21 கிலோ எடையுள்ள, உலர் உணவுப் பொருட்களை பு/எருக்கலம்பிட்டியிலும், கரம்பையிலும் வாழும் 1350 எருக்கலம்பிட்டி குடும்பங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத முறையில் முன்மாதிரியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் வழங்கி வைத்தமை அனைவராலும் பாராட்டப்பட்ட விடயமாகும்.
அவர்களது இத்தகைய நற்பணி, சிறப்புடனும் நேர்த்தியுடனும், நமது் ஊர் மக்களின் நல்லாதரவுடனும் தொடர, நாம் அவர்களை வாழ்த்துகிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ், இவர்களது இத்தகைய சேவைகளப் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்.
மேலும் இன்றை இந்த விநியோக நிகழ்வில், நிர்வாக சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட உள்ளூர் மற்றும் வெளியூர் நம்பிக்கையாளர்கள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.