Friday, April 4, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபெயரை மாற்றியமைக்காக கொதித்த சிறீதரன் எம்.பி!

பெயரை மாற்றியமைக்காக கொதித்த சிறீதரன் எம்.பி!

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதிசெய்க. : சிறீதரன் எம்.பி கோரிக்கை.

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும், ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த ஓர் அடையாளம் ஆகும். அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த காலங்களில் இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடையாளத் திணிப்புகளைப் போலவே, எமது மொழியியல் அடையாளத்தை சிதைத்து, பெரும்பான்மையினத்தின் தனித்துவத்தை வலிந்து புகுத்தும் இன மேலாதிக்கச் செயற்பாடாகவே இதனையும் கருத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

கடந்த 2025.03.18 ஆம் திகதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22.7 இன் கீழ், ஆனையிறவு உப்பளம் குறித்து பாராளுமன்றில் நான் கேள்வி எழுப்பியபோது வலியுறுத்தியதற்கு அமைவாகவும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular