ஜூட் சமந்த
சிலாபம்-காக்கப்பள்ளிய ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாததால் கடுமையாக சேதமடைந்து, இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக ரயில் பயணிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிலாபம்-கொழும்பு ரயில் பாதையில் உள்ள காக்கப்பள்ளிய ரயில் நிலையம், தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தும் இடமாகும்.
இந்த ரயில் நிலையத்தைச் சுற்றி களைகள் வளர்ந்து காணப்படுவதாகவும், கட்டிடம் கட்டப்பட்டதிலிருந்து சுத்தம் செய்யப்படவோ அல்லது புதுப்பிக்கப்படவோ இல்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ரயில் நிலையத்தின் மேல் தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமும் பாழடைந்துள்ளதால், நீண்ட காலமாக யாரும் அங்கு தங்கியிருக்கவில்லை என்றும் தெரிகிறது. ரயில் நிலையத்தில் ஒரு கழிப்பறை இருந்தாலும், அது பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லை என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
கழிப்பறையைச் சுற்றி களைகள் வளர்ந்திருப்பதால், யாரும் அதற்குள் நுழைய முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி அதிக அளவில் காடுகளாக மாறிவிட்டதாகவும், பல காலமாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும் பயணிகள் கூறுகின்றனர். சில பயணிகள் இரவில் கட்டாய தேவை கருதி காக்கப்பள்ளியா ரயில் நிலையத்தைப் பயன்படுத்தினாலும், மற்றவர்கள் அந்தப் பகுதியில் விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக மாறிவிட்டதால் பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இது ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்க அரசு தற்போது தயாராகி வருகிறது.
இருப்பினும், சீரழிந்து இடிந்து விழும் நிலையில் உள்ள துணை ரயில் நிலையங்கள் குறித்து எந்த கவனமும் செலுத்தப்படாதது வருத்தமளிக்கிறது.
களைகள் வளர்ந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ள காக்கப்பள்ளியா ரயில் நிலையம், அவசரமாக சரிசெய்ய வேண்டிய இடம் என்று பயணிகளும் உள்ளூர்வாசிகளும் கூறுயுள்ளமை குறிப்பிடத்தக்கது.







