பொரளை, சஹஸ்புர பகுதியில் சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு 8:40 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
ஸ்கூட்டரில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், டி56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி ஐந்து இளைஞர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடியதாகவும், சம்பவ இடத்தில் 25 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர்களில் கொழும்பு 9 பகுதியைச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய நான்கு இளைஞர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மூவருக்கும் எதிர்காலத்தில் மேலதிக அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம் என்றும், அவர்களின் உடல்நிலை குறித்து தற்போது உறுதியாக கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் எனவும், இதற்கு பின்னணியில் உள்ள காரணங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெறுவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.