அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதித்திட்டங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து ஆதரித்த மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நமது நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த முன்வந்து இந்தத் தேர்தலுக்கு ஒத்துழைப்பை நல்கிய நமது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அண்மையில் நடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இரு பெரும் மக்கள் ஆணைகளைப் பெற்ற இந்த அரசாங்கம், 6 மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்ற செய்தியை நாட்டு மக்கள் இத்தேர்தலின் ஊடாக முன்வைத்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலை கையாண்டது போலவே இந்த உள்ளூராட்சித் தேர்தலையும் ஜே.வி.பி கையாண்டது. தேர்தலுக்காக மதத்தைக் கூடப் இவர்கள் பயன்படுத்தினர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (07) விசேட அறிக்கையை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டு மக்கள் இப்போது பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான தமது அங்கீகரித்தை வழங்கியுள்ளனர். பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பொய்களை முறியடித்து, உண்மையான பலம் வாய்ந்த மக்கள் சேவைக்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்புகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் இந்த சவாலான பொறுப்பிற்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நபராக, நாங்கள் பொதுமக்களின் கருத்துக்கு தலைவணங்கி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல தரப்பினர்களையும் ஒன்றிணைப்போம். அதன் ஊடாக வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும், கொள்கை ரீதியானதுமான சிறந்த மக்கள் சேவையை பெற்றுத் தருவோம். இதற்கான தலைமைத்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என தெரிவித்தார்.