கலாநிதி மற்றும் பேராசிரியர்கள் போன்ற பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான சட்ட மாற்றங்களை முன்வைக்க வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பல்கலைக்கழக முறைமை மற்றும் உயர்கல்வி தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கோப் குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது, கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதால், இந்த விவகாரத்தில் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று வலியுறுத்திய கோப் குழு, அத்தகைய பட்டங்களை முறையற்றவாறு பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்ட மாற்றங்களை ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.