இலங்கையில் நடந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கில் போலீஸ் டிஐஜி பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 270 பேர் கொல்லப்பட்டனர். சுற்றுலா பயணிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தேசிய காவல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஈஸ்டர் குண்டு வெடிப்பு வழக்கு விவகாரத்தில் தற்போது டிஐஜியாக உள்ள நிலந்த ஜெயவந்தன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இலங்கை தேசிய காவல் ஆணையம் வௌியிட்ட அறிக்கையில், “நிலந்த ஜெயவர்தன மீது சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மூலம் அவர் குற்றவாளி என உறுதியானது. இதையடுத்து கடந்த 17ம் தேதி நடந்த தேசிய காவல் ஆணைய கூட்டத்தில், பணியின்போது கடமை தவறிய நிலந்த ஜெயவர்தனாவை உடனடி பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து நிலந்த ஜெயவர்தன பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.