மட்டக்களப்பில் பெய்துவரும் தொடர் மழையினால் புறநகர் பகுதிகளுக்கான போக்குவரத்தில் பாதிப்பு!!
மட்டக்களப்பு நகர் பகுதியிலிருந்து புறநகர் பகுதிகளான வவுணதீவு, கொக்கட்டிச்சோலை மற்றும் மட்டக்களப்பு – திருகோணமலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பிரதான தரை வழி போக்குவரத்து மார்க்கங்களான வலயறவு பாலம், சுமை தாந்தி பாலம், மண்முனை பாலம், பிள்ளையாரடி பிரதான வீதி ஆகியவற்றிற்கு மேலாக ஆற்று நீர் பெருக்கெடுத்து காணப்படுவதனால் பொதுமக்களது போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புகையிரத நிலையம் வெள்ள நீரினால் முற்றாக மூழ்கி காணப்படுவதுடன், மன்னம்பிட்டி பகுதியில் நீர் பிரவாகம் அதிகரித்து காணப்படுவதனாலும் மறு அறிவித்தல் வரை இன்றிலிருந்து (27) மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து புகையிரத சேவைகளும் ரத்து செய்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்,
மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களான கூழாவடி, நாவற்குடா, இருதயபுரம், கல்லடி, ஆரையம்பதி மற்றும் ஒல்லிக் குளம் ஆகிய பகுதிகளில் வீதிகளிலும், வீடுகளிற்குள்ளும் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதனால் மக்களது இயல்பு வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றுடனான கன மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



