ஜூட் சமந்த
தனது மகனுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் எல்லை மீறி சென்றதை அடுத்து மகனை ஏர் ரைஃபிள் துப்பாக்கி மூலம் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பல்லம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று 18 ஆம் தேதி இரவு 10.00 மணியளவில் ஆனமடுவ, ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதவக்குளம், ஆண்டிகம, கடையந்தலுவ பகுதியைச் சேர்ந்த முகமது ரஷிக் முகமது (வயது 17), ஆனமடுவ மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சம்பவத்தில் தொடர்புடைய தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருவதாகவும், நேற்று 18 ஆம் தேதி இரவு ஏற்பட்ட இதே போன்ற வாக்குவாதமே துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு சந்தேக நபர் பயன்படுத்திய ஏர் ரைஃபிள்ரக துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஆனமடுவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.