மன்னாரில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 56,870 மருந்து மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது!
மன்னார், கீரி கடற்கரைப் பகுதியில் கடந்த 2025 அக்டோபர் 06 ஆம் திகதி அதிகாலை இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை கடற்படை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மன்னார், கீரி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் தால்வுபாடு கடற்படைப் பிரிவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, குறிப்பிட்ட கடல் பகுதி வழியாக கடற்கரைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதன் போது, டிங்கி படகொன்றில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஐம்பத்தாறாயிரத்து எண்ணூற்று எழுபது (56,870) மருந்து மாத்திரைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் மேற்படி சந்தேக நபர் ஒருவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், தால்வுபாடு பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர், மருந்து மாத்திரைகள், அழகுசாதனப் பொருட்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
