மன்னார் உத்தேசித்த காற்றாலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தினால் சூழல் பாதிப்பு ஏற்படுமா?
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மின் சக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டின் ஊடாக 70 சதவீத மின் உற்பத்தியை மேற்கொள்வதே எமது இலக்காகும். அதனடிப்படையில் 5 வருடங்களுக்குள் அதாவது 2030ஆம் ஆண்டாகும் போது மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
இந்த இலக்கை அடைவதற்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை மிகக் குறைந்த செலவில் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் ஸ்திரத்தன்மை ஆகியவையே அந்த மூன்று பிரதான காரணிகள் ஆகும். இவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை கிடைத்த பின்னரே வேலை திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் சுற்றாடல் அமைச்சன் அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நீர் வழங்கள் வடிகால் அமைப்பு அதிகார சபை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவி சரிதவியல் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவுக்கு ஒரு வாரம் காலம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் இக்குழுவுடனான முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளது. ஒரு வாரத்துக்குள் பிரச்சனைகளை இனங்ண்டு அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் அந்த தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் அதற்கு எடுக்கும் காலம் என்பவற்றை பரிந்துரைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
