கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் மன்னார் நகர சபை உறுப்பினர் ராஜன் ஐயா, அதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக ஐந்து சபைகளுக்காக மொத்தமாக சுமார் 10 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், மன்னார் நகர சபை உறுப்பினர் ராஜன் ஐயா, இவ்வாறு அதன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபைக்கு நியமிக்கப்பட்ட கௌரவ ராஜன் ஐயா, சபையின் முதல் அமர்வில் ஊடகவியலாளர்களுக்கும் நகர சபை தவிசாளருக்கும் வழங்கிய செவ்வியின் (Interview) மூலம் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக, கட்சித் தலைமையால் அவரிடம் விளக்கம் கோரப்பட்டது.
அவர் முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால், அவரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்ட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது.
இதனை எதிர்த்து ராஜன் ஐயா நீதிமன்றத்தை நாடிய நிலையில், சுமார் மூன்று மாத கால விசாரணைக்குப் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. இம்மாதம் 12ஆம் திகதி வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பின்படி, அவர் கட்சி உறுப்புரிமையை இழந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றத் தீர்ப்பின்படி அவர் கட்சி உறுப்புரிமையை இழந்தமையால், அவர் தனது மன்னார் நகர சபை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளதுடன், இது தொடர்பில் இன்று 21/01/2026 வர்த்தமானியில் (Gazette) அதிகாரப்பூர்வமாக கட்சியின் உறுப்புரிமையை இழந்துள்ளதாக பிரசுரிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



