மன்னார் பிரதேச சபையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது – புதிய தவிசாளராக இஸ்மாயில் இஸ்ஸதீன் தெரிவு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வசம் இருந்த மன்னார் பிரதேச சபை தற்பொழுது இவ் சபையின்அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் S.H.M.முஜாஹிர் பதவி வகித்து வந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான பாதீடு 2 தடவைகள் தோற்கடிக்கப்பட்டதனால் 12.01.2022 அன்று காலை 10.30 மணியளவில் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் தலைமையில் புதிய தவிசாளருக்கான தெரிவு இடம் பெற்றது.
இதன் போது புதிய தவிசாளர் தெரிவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் உப தவிசாளருமான இஸ்மாயில் இஸ்ஸதீனின் பெயர் பரிந்துரைக்கப்பட்து.
எனினும் தவிசாளர் தெரிவிற்கு வேறு எந்த உறுப்பினர்களுடைய பெயரும் பரிந்துரைக்கப்படவில்லை.
இந்நிலையில் மன்னார் பிரதேச சபையின் 21 உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் உப தவிசாளராக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எருக்கலம்பிட்டி உறுப்பினர் இஸ்மாயில் இஸ்ஸதீன் மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 உறுப்பினர்களும் பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒவ்வொரு உறுப்பினரும் பூரண ஆதரவை ஆரம்ப முதல் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.