Sponsored Advertisement
HomeLocal Newsமன்னார் புதிய தவிசாளருக்கு ஏற்பட்ட சிக்கல்!

மன்னார் புதிய தவிசாளருக்கு ஏற்பட்ட சிக்கல்!

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான  வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பிரதிவாதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் உள்ளூராட்சி  ஆணையாளர், செயலாளர் உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

அத்துடன், தாம் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டி தனக்கு எதிரான ஒழுக்காற்று  விசாரணைகளை நடத்தி தன்னை பிரதேச சபை தவிசாளர் பதவியில் இருந்து நீக்கியதாகவும், குறித்த விசாரணைகளின்போது தனது தரப்பு நியாயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதையடுத்து, அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் கடந்த 13ஆம் திகதி வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version