மன்னார் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் பிரதிநித்துவப்படுத்தி கலந்துகொண்ட அணிகளுக்கிடையான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிறு (14.09.2025) மன்னார் நகரசபை பொது மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மன்னார் மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த சுற்றுப் போட்டிக்கு மன்னார் மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஜனாப் ஹக் முகம்மது அரூஸ் தலைமை தாங்கி நடத்திவைத்தார்.
குறித்த தொடரில் ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 9 அணிகள் பங்குபற்றி தொடரை அலங்கரித்தனர்.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற குறித்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி, துள்ளுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதி போட்டியில் எருக்கலம்பிட்டி மற்றும் துள்ளுக்குடியிருப்பு அணிகள் மோதியதுடன், எருக்கலம்பிட்டி அணியை வீழ்த்தி துள்ளுக்குடியிருப்பு அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
இதேவேளை இரண்டாவது அரையிறுதி போட்டியில் புதுக்குடியிருப்பு மற்றும் தலைமன்னார் பியர் அணிகள் மோதியதுடன், தலைமன்னார் பியர் அணியை புதுக்குடியிருப்பு அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப்போட்டியில் புதுக்குடியிருப்பு அணியும் துள்ளுக்குடியிருப்பு அணியும் பலப்பரீட்சை நடத்தியதுடன், துள்ளுக்குடியிருப்பு அணியை வீழ்த்தி புதுக்குடியிருப்பு அணி சாம்பியன் ஆனது.
தொடரில் சாம்பியன் ஆன புதுக்குடியிருப்பு அணிக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்த துள்ளுக்குடியிருப்பு அணிக்கும் கிண்ணம் மற்றும் பணப்பரிசு வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மக்கள் வங்கி கிளையின் முதன்மை வாடிக்கையாளர்களில் ஒருவரான ஜனாப் எம்.எச்.எம். பாஹிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், மன்னார் மக்கள் வங்கி கிளையின் ஊழியர்கள் மற்றும் கிரிக்கட் அபிமானிகள் குறித்த சுற்றுத்தொடரில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
