ஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டின் கிரிக்கெட் ஜாம்வனுமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அவர் நலமாக இருப்பதாக இன்னும் ஒரு செய்தி கூறுகிறது.
அவரது நோய் குறித்த விபரங்கள் சரியாக வெளியிடப்படாத போதிலும் அவர் தென் ஆபிரிக்காவில் சிகிச்சை பெற்றுவருதாகக் கூறப்படுகிறது.
அவர் கடும் சுகவீனமுற்றிருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவர் விரைவாக நலம்பெற வேண்டும் என இரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸிம்பாப்வேயின் முன்னாள் கல்வி, கலை மற்றும் கலாசசார அமைச்சர் டேவிட் கோல்ட்டார்ட் தனது ட்விட்டர் மூலம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்,
இதேவேளை, புகழ்பூத்த கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக்கை ஓர் அற்புதத்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் மைக் மெடோடா கூறியுள்ளார். ஸ்ட்ரீக் நலம் பெற அனைவரும் பிரார்த்திக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ஹீத் ஸ்ட்ரீக் கடைசிப் பயணத்தில் உள்ளார். அவரது குடும்பத்தினர் இங்கிலாந்தில் இருந்து தென் ஆபிரிக்கா சென்றுள்ளனர். இப்போது ஒரு அற்புதம் மட்டுமே அவரை காப்பாற்றும் என்று தெரிகிறது. பிரார்த்தனைகள் அவசியம்’ என மெடோடா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 49 வயதான ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் நல்ல மன நிலையில் இருப்பதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.
இந் நிலையில், ‘கிரிக்கெட் அரங்கில் ஹீத் ஸ்ட்ரீக் உச்ச நிலையில் இருந்தபோது அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதில் எதிரணி வீரர்கள் எவ்வாறு சிரமங்களை அனுபவித்தார்களோ அதே போன்று நோயை ஹீத் ஸ்ட்ரீக் எதிர்த்துப் போராடுவார்’ என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
‘ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். தென் ஆபிரிக்காவில் பிரபல புற்றுநோயியல் நிபுணர் ஒருவரிடம் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று அவரது குடும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
‘அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார், கிரிக்கெட் அரங்கில் அவர் உச்ச நிலையில் இருந்தபோது அவரது எதிரிகள் எதிர்கொண்டதைப் போன்றே இந்த நோயை அவர் எதிர்த்துப் போராடுவார். அவரது உடல்நிலை குறித்து இப்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை. எந்த செய்தியும் உண்மையாகவும் உறுதியாகவும் வெளியிடப்பட வேண்டும். ஏனையவை வதந்தியாகவே கருதப்படும்’ என அவரது குடும்பத்தினர் கூறினர்.
ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியில் 1990களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் பிரதான வீரராக இடம்பெற்றார்.
65 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 1990 ஓட்டங்களைப் பெற்றதுடன் 216 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
189 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2943 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அத்துடன் 239 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
ஸிம்பாப்வே கிரிக்கெட் சபையினருடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக 2004 இல் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஒரு வருடம் கழித்து தனது 31ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐசிசியின் 5 ஒழுக்க விதிகளை மீறியதாக ஓப்புக்கொண்டதை அடுத்து 2021 ஆம் ஆண்டில், 8 வருட தடைக்குட்பட்டார்.
கிரிக்கெட் விளையாட்டிலிருந்து வீரராக ஓய்வுபெற்ற பின்னர் ஹீத் ஸ்ட்ரீக் பல்வேறு அணிகளுக்கு பயிற்றுநராக இருந்துள்ளார். பங்களாதேஷ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சமர்செட் ஆகிய அணிகளின் பந்துவீச்சு பயிற்றுநராக அவர் பதவி வகித்தார்.