அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.
மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம். பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது கிடையாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை பிரதமராக நியமிக்க கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதற்கு இணக்கம் தெரிவித்தார்.
பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு கட்சி என்ற ரீதியில் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம்.
ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை நாங்களே தெரிவு செய்தோம்.ஆகவே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை ஏதும் கிடையாது.
அரசியல் சூழ்ச்சி,அரசியல் நெருக்கடி ஆகியவற்றின் ஊடாக மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க வேண்டிய தேவை கிடையாது.
மக்களாணையுடன் மீண்டும் அவரை பிரதமராக்குவோம்.தேர்தல் ஒன்று இடம்பெற்றாமல் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளமை அவரது தனிப்பட்ட கருத்தாகும்.
அதற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கலாம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைளை முழுமையாக ஏற்றுக் கொண்டு அதனை செயற்படுத்துபவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.
எக்காரணிகளுக்காகவும் கட்சி கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சகல தேர்தல்களிலும் எமது கட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.
அமைச்சரவை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.நிலையான அமைச்சரவை ஒன்றை அமைக்கும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எட்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இரண்டு முறை எழுத்து மூலமாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.
2023 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என்று குறிப்பிடப்பட்டது.அதன் பின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு என குறிப்பிடப்பட்டது.
ஆனால் இதுவரை நிலையான அமைச்சரவை ஸ்தாபிக்கப்படவில்லை.அமைச்சரவை தொடர்பில் இனி கட்சி மட்டத்தில் ஜனாதிபதியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட போவதில்லை.அமைச்சு பதவி இல்லாவிடினும் அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.