இலங்கை ஒலிபரப்புத் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை நடாத்திய அறிவுக் களஞ்சிய போட்டியின் இரண்டாம் கட்டமான மாகாண மட்ட போட்டிகள் நேற்று வவுனியா முஸ்லீம் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற சுற்றில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி முதலாமிடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
அந்த வகையில் வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இடம்பெற்ற சுற்றுக்களில் முதலாமிடம் பெற்ற பாடசாலைகள் நேற்று வவுனியா முஸ்லீம் தேசிய பாடசாலையில் பலப்பரிட்சை நடத்தின.
இடம்பெற்ற மாகாண மட்ட போட்டிகளில் மொத்தமாக நான்கு பாடசாலைகள் தகுதிபெற்று போட்டியில் கலந்துகொண்டன.
குறித்த நான்கு பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற சுற்றுப்போட்டிகளில் அதீத திறமைகளை வெளிப்படுத்திய வவுனியா முஸ்லீம் தேசிய பாடசாலை மற்றும் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஷ்யமாகவும் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வவுனியா முஸ்லீம் தேசிய பாடசாலையை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி வெற்றிகொண்டு மாகாண மட்ட சுற்றுத்தொடரில் மகுடம் சூடிக்கொண்டது.
மேலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மட்ட அறிவுக் களஞ்சிய போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
